விமான நிலைய விரிவாக்கம் சின்னஉடைப்பில் ஆர்ப்பாட்டம்
அவனியாபுரம்: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு பகுதியில் மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விமான நிலையம் விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதி விவசாய நிலங்கள், வீடுகள், கோயில், மயானம் உள்ளிட்ட இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அதற்கு மாற்றாக தங்களுக்கு மாநகராட்சி பகுதிக்குள் 3 சென்ட் இடமும் வீடும் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் வீடுகள், நிலங்களை கையகப்படுத்த தாசில்தார் விஜயலட்சுமி, விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன் வந்தனர். எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் சமரசம் பேசினர்.
ஏற்கனவே நிலம் விரிவாக்கம் தொடர்பாக அறிவித்ததுடன் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி முடிவெடுப்பதாகவும் தாசில்தார்கள், போலீசார் தெரிவித்தனர். நேற்று மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.