தி.மு.க., அரசை கண்டித்து குன்றத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம்,: அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட லோயர் கேம்ப் குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும், திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும், சாலைகளை சீரமைக்கவும், தென்கால் கண்மாய் கரை மணல் கொள்ளையை கண்டித்தும் அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: திருப்பரங்குன்றம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., தொகுதி என்பதால், மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர தி.மு.க., அரசு மறுக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் குப்பை வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் ரோட்டில் நடமாட முடியாது.

கருணாநிதி போன்றே ஸ்டாலினும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., அரசின் சாதனைகளாக தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. தாராளமாக போதை பொருட்கள் விற்பனை. முதல்முறையாக முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் ஆர்ப்பாட்டத்தை துவக்கி உள்ளோம். இனி தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடக்கும் என்றார்.

ராஜன் செல்லப்பா பேசுகையில், ''மதுரைக்கு மெட்ரோ ரயில், தொழில்நுட்ப பூங்கா திட்டம் என்னானது. மினி விளையாட்டு அரங்கம் அமைப்போம் என்றனர். அமைத்தார்களா. ஊருக்கு ஊர் கருணாநிதி சிலை மட்டும் வைக்கின்றனர். இதனால் மக்களுக்கு என்ன பிரயோஜனம். 2026ல் மாபெரும் புரட்சி ஏற்பட வேண்டும்'' என்றார்.

எம்.எல்.ஏ., பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் செல்வகுமார், பாலமுருகன், பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement