விரிவாக்க மையத்தில் வாங்கிய விதைநெல் வீண் விவசாயிகள் குமுறல்

மேலுார்,: திருவாதவூர் வேளாண் விரிவாக்க மையத்தில் விதைச்சான்றுடன் வாங்கிய நெல் முளைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருவாதவூரில் வேளாண் விரிவாக்க மையத்தில் ஆமூர், கீரனுார், கட்டையம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோ 54, 55, என்.எல்.ஆர்.,உள்ளிட்ட விதை நெல் வாங்கி செல்கின்றனர். விவசாயிகள் 50 கிலோ மூடையை ரூ 1,500 க்கு வாங்கி நேரடி நெல் விதைப்பாகவும், நாற்றாகவும் பயிரிட்டுள்ளனர். ஆனால் ஏராளமான விவசாயிகளுக்கு விதை நெல் முளைக்கவில்லை.

விவசாயி கிருஷ்ணன் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ. 7 ஆயிரம் செலவு செய்து விரிவாக்க மையத்தில் விதைச் சான்றுடன் கூடிய நெல் மூடையை வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்தேன். முப்பது நாட்கள் ஆனபின்னும் நெல் முளைவிடவில்லை. சில இடங்களில் மட்டுமே நாற்று முளைத்துள்ளது.

அரசு மையம் என்பதால் தரமான விதை கிடைக்கும் என நம்பி பயிரிட்ட நிலையில் முளைப்புத் திறன் இல்லாத விதை நெல் வழங்கியதால் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. உரிய நிவாரணம் வழங்குவதோடு தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் என்றார்.

துணை வேளாண்மை அலுவலர் தனலெட்சுமி கூறுகையில், வெளியில் இருந்து விரிவாக்க மையத்திற்கு வந்த நெல் என்பதால் தரமற்றதாக உள்ளது. இனிமேல் தரமற்ற நெல் வராமல் பார்த்து கொள்கிறோம் என்றார்.

Advertisement