ஜல்லிக்கட்டு மைதானம் செல்ல சர்வீஸ் ரோடு: கிராம மக்கள் எதிர்பார்ப்பு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் மற்றும் கிராமங்களுக்கு செல்ல அவுட்டர் ரிங் ரோட்டில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

வாடிப்பட்டி- - தாமரைப்பட்டி இடையே பாரத்மாலா திட்டத்தில் அவுட்டர் ரிங் ரோடு அமைக்கப்படுகிறது. மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் எளிதாக செல்லவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. வாடிப்பட்டியில் துவங்கும் இந்த ரோட்டில் அலங்காநல்லுார் கடந்து வலசையில் தான் சர்வீஸ் ரோடு அமைகிறது.

இதனால் இந்த ரோட்டை பயன்படுத்தி வரும் வாகனங்கள் அலங்காநல்லுாருக்குள் வந்து தான் ஜல்லிக்கட்டு மைதானம் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் குறுகலான அலங்காநல்லுார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இந்த ரோட்டிற்காக விவசாய நிலங்களை வழங்கிய கிராம மக்களும் பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

காங்., வட்டார தலைவர் சுப்பாராயலு கூறுகையில், ''வாடிப்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள் ஜல்லிக்கட்டு மைதானம், கிராமங்களுக்கு செல்ல அலங்காநல்லுார் வந்து சென்றால் போக்குவரத்து பாதிக்கும். எனவே சின்ன இலந்தைகுளம், பன்னைகுடியில் சர்வீஸ் ரோடு அமைத்தால் அப்பகுதி சுற்றுவட்டார கிராமத்தினர் பயன்பெறுவர்'' என்றார்.

Advertisement