‛எப்போதும் எரியும் பொதுப்பணித்துறை வளாகம்

மதுரை: மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் ஆங்காங்கே குப்பையை குவித்து எப்போதும் எரியவைக்கின்றனர்.

இந்த வளாகத்தில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையின் 10க்கு மேற்பட்ட பிரிவுகள் செயல்படுகின்றன.

அலுவலகம் மற்றும் வளாக குப்பையை ஊழியர்கள் சுத்தம் செய்தாலும் ஒரு இடத்தில் கூட குப்பைத்தொட்டி வைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகத்தின் பக்கவாட்டு பகுதி அல்லது பின்பகுதியில் குப்பை சேகரித்து வைக்கின்றனர்.

மறுநாள் குப்பை சேரும் போது தீயிட்டு எரிக்கின்றனர். இப்படி பல ஆண்டுகளாக குப்பையை முறையாக அகற்றுவதே இல்லை.

பழைய புதிய கட்டட வளாகங்களை இணைக்கும் சந்து பகுதியில் கான்கிரீட் மின் டிரான்ஸ்பார்மருக்கு கீழே தினமும் குப்பை தீயிட்டு கொளுத்தப்படுகிறது.

சுற்றிலும் மரங்கள் அடர்ந்துள்ளதால் எதிர்பாராதவிதமாக தீ கொளுந்து விட்டு எரிந்தால் மரங்களும் மின்ஒயர்களும் எளிதாக பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. குப்பையை தீயிட்டு எரிப்பதை பொதுப்பணித்துறை நிர்வாகம் நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும்.

குப்பைத்தொட்டிகளை வாங்கி வைத்து மாநகராட்சியுடன் பேசி குப்பையை அள்ளிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement