மலேசியாவில் இருந்து கடத்தல் பெங்களூரில் 40 விலங்குகள் மீட்பு

பெங்களூரு: கோலாலம்பூரில் இருந்து டிராலியில் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வழியாக கடத்தப்பட்ட நட்சத்திர ஆமைகள், குரங்கு குட்டி, முதலை குஞ்சு உட்பட அரிய வகை வன விலங்குகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


கோலாலம்பூரில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு நவ., 12ம் தேதி விமானம் தரையிறங்கியது. இதில் பயணம் செய்த பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.


அப்போது இரு பயணியரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த டிராலிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஒரு டிராலியில், அல்டாப்ரா ஆமைகள், சிவப்புக் கல் ஆமைகள், பல்லிகள், அல்பினோ வவ்வால் உட்பட 24 விலங்குகளும்; மற்றொரு டிராலியில் லுட்டினோ உடும்புகள், அமெரிக்கன் முதலை குஞ்சு, குரங்கு குட்டி உட்பட 16 விலங்குகளும் இருந்தன.


இவற்றை கடத்தி வந்த இரு பயணியர் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.



டிராலியில் கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டி, ஆமை குஞ்சுகள்.

Advertisement