விவசாயத்தில் புதுமை செய்த எம்.பி.ஏ., பட்டதாரி
இன்றைய சூழ்நிலையில், காலம் காலமாக விவசாயம் செய்த குடும்பத்தினரே, அது லாபம் தரவில்லை என, விரக்தியில் விவசாயத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு, நகருக்கு குடிபெயர்கின்றனர்.
கூலி வேலைக்கோ, தொழிற்சாலைகளிலோ பணியில் சேர்ந்து வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் எம்.பி.ஏ., பட்டதாரி இளைஞர் ஒருவர், விவசாயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரகன்னடா மாவட்டம், சிர்சியின் ஹுளகோலா கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயக் ஹெக்டே, 28. இவர் எம்.பி.ஏ., பட்டதாரி. உயர் கல்வி கற்றிருந்தாலும், இவருக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம்.
தங்கள் தோட்டத்தில் பாக்கு, மிளகு, வாழை ஆகியவை பயிரிட்டுள்ளார். நல்ல மகசூல் கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கிறார்.
விநாயக் ஹெக்டே விவசாயி மட்டுமல்ல. திறமையான மெக்கானிக்கும் கூட. 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆம்னி வேன் வாங்கினார். அதன்பின் புதிய கார் வாங்கியதால், ஆம்னி வேன் வேலையில்லாமல், ஓரமாக நின்றிருந்தது.
இதை பார்த்த அவரது மெக்கானிக் மூளை, ஆம்னி வேனை சரக்கு வாகனமாக மாற்றினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
தன் மெக்கானிக் திறமையை பயன்படுத்தி, யூ டியூப் வீடியோக்களை பார்த்து ஆம்னி வேனை சரக்கு வாகனமாக மாற்றினார். இதற்காக 15,000 ரூபாய் செலவழித்தார். இந்த வாகனம் 800 கிலோ பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டுள்ளது.
தோட்டத்தில் விளையும் பொருட்களை, மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல, இந்த வாகனத்தை பயன்படுத்துகிறார்.
இதற்கு முன்பு வாடகை வாகனங்களை பயன்படுத்தினார். இப்போது சொந்த வாகனம் பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான ரூபாய் மிச்சமாகிறது.
கீரை, பாக்கு, இளநீர், மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களை இதே வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார். தன் பழைய ஸ்கூட்டரை தோட்ட பணிக்கு பயன்படுத்துகிறார். விவசாயத்திலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். இதனால் வெற்றி கிடைத்துள்ளது.
முயற்சியும், மன திடமும் இருந்தால், எதையும் சாதிக்கலாம். விவசாயத்தையும் லாபகரமாக்க முடியும் என்பதை செய்து காண்பித்துள்ளார்.
- நமது நிருபர் -