வீரிருப்பில் அமைகிறது அமைதிக்கு ஒரு கோபுரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் வீரிருப்பு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது தென்னிந்தியாவின் அமைதிக்கான முதல் கோபுரம்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக புத்தபிட்சு பியூஜி குருஜி மகாராஷ்டிரா சேவாகிராமில் 1934ல் காந்தியை சந்தித்தார். காந்தியின் அகிம்சை கொள்கைகளும் பியூஜியின் புத்தமத சிந்தனைகளும் இருவரையும் இணைத்தது. அதன் பலனாக தமிழகத்தில் முதன்முறையாக தென்னிந்திய அளவில் உலக அமைதிக்கான கோபுரம் அமைக்கப்பட்டது என்கிறார் மதுரை காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ். மியூசிய வளாகத்தில் உள்ள புத்தர் அமைதி மையம் வழியாக எங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது என விவரித்தார்.

அவர் கூறியது: இலங்கையில் கலவரம் நடந்த போது புத்தபிட்சு பியூஜி அங்கு அமைதி பயணம் மேற்கொண்டார். புத்தபிட்சு இஸ்தானியை சந்தித்த பியூஜி கன்னியாகுமரியில் அமைதிக்கான ஸ்துாபி கட்டும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

இஸ்தானி மதுரை வந்த போது காந்தி மியூசியத்தில் புத்தர் அமைதி மையம் துவக்கி ஸ்துாபி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். சங்கரன்கோவில் வீரிருப்பு பகுதி சர்வோதய தலைவர் முத்தையா 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன் ஸ்துாபி கட்டும் பணியை இஸ்தானி துவங்கினார்.

இவரது சேவை தானத்திற்கு ஜப்பானை சேர்ந்த குமுராய், தமிழகத்தின் லீலாவதி உதவினர். நிதி திரட்டி 120 அடி உயர அமைதி கோபுரத்தை உருவாக்கினார். 2019ல் ஜப்பான் சென்று அங்கிருந்த புத்தரின் அஸ்தியை கொஞ்சம் எடுத்து வந்து கோபுர மாடப்பகுதியில் வைத்து கோபுரத்தை முழுமையடையச் செய்தார். உலகில் அமைதி திரும்பவேண்டும்; அன்பு பரிமாற்றம் வேண்டும் என்பதே இவரது எண்ணம்.

படிக்கட்டுகளின் மேலேறி சென்றால் கோபுரத்தின் 120 அடியையும் பார்த்து ரசிக்கலாம். முன்பகுதியில் உபதேச புத்தர் சிலை காணப்படுகிறது. இது காசி சாரநாத்தில் உள்ள புத்தர் சிலையைப் போன்றது. நேபாளம் லும்பினியில் உள்ளதைப் போன்ற பால புத்தர், புத்தகயாவில் ஞானம் பெற்ற தவ புத்தர், இந்திய, நேபாள எல்லை குஷிநகரில் உள்ளதை போன்ற நிர்வாண முக்தி புத்தர் சிலைகள் கோபுரத்தின் 4 பக்கங்களிலும் வடிக்கப்பட்டுள்ளன.

அருகிலேயே புத்தர் கோயில் உள்ளது. காலை, மாலை 4:30 முதல் 6:30 மணி வரை புத்தரின் போதனைகளை மேற்கொண்டு பிரார்த்தனை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட சுற்றுலா தலமாக இந்த ஸ்துாபி சேர்க்கப்பட்டுள்ளதால் அனுமதி இலவசம். வளாகத்தைச் சுற்றிலும் மரங்கள் அடர்ந்துள்ளன. இளைப்பாற இருக்கை, குடிநீர், கழிப்பறை வசதிகளும் உள்ளன. தென்காசிக்கு சுற்றுலா செல்பவர்கள் அமைதி கோபுரத்தின் அழகையும் புத்தரின் சிலைகளையும் பார்த்து ரசிக்கலாம். 2025 பிப்.21ல் தான் கோபுரம் திறப்பு விழா என்றாலும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க தடையில்லை என்றார்.

Advertisement