கஸ்துாரியின் பாதுகாப்பை உறுதி செய்யணும்: எச்.ராஜா வலியுறுத்தல்
புதுக்கோட்டை: 'நடிகை கஸ்துாரியின் பாதுகாப்பை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்' என்று பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக கூறினார்.
புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், எச்.ராஜா கூறியதாவது: மத்தியில் கூட்டணி அரசு தான் ஆட்சியில் உள்ளது. நாங்கள் கூட்டணி பலத்தோடு லோக்சபா தேர்தலை சந்தித்து இருக்கிறோம். 1967ல் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வரும் திமுக, இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. திருமாவளவன் உடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் தி.மு.க., ஓட்டு கேட்கும். ஆனால் திருமாவளவன் மந்திரி சபையில் இடம் கேட்டால், வெளியே உட்கார வைத்து விடுவார்கள்.இது தான் தி.மு.க.,வின் குணம்.
கூட்டணி முடிவு
நாங்கள் 1998ம் ஆண்டிலேயே கூட்டணி ஆட்சி தான் வைத்து இருந்தோம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். நாங்கள் அதனை செயல்படுத்தும் இடத்தில் இருக்கிறோம். கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.,வில் யாராலும் முடிவு செய்ய முடியாது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு போட்டி யாருக்கும் கிடையாது.
விஜய் புதிதாய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். தி.மு.க.,வினர் இத்தனை ஆண்டு காலமாக, கிளிப்பிள்ளை போல் சொல்லி கொண்டு இருந்ததை, இவர் திருப்பி சொல்கிறார்.
திராவிடம்
திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். குணத்தை குறிக்காது. இவங்க எல்லாம் முட்டாள் கூட்டம். திராவிடம் என்பது குறித்து நான் பலமுறை சொல்லிவிட்டேன். திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை.
நடிகை கஸ்தூரியின் பாதுகாப்பை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்ய முடியாத போலீசாரால், நடிகை கஸ்துாரியை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.