டில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா; ஆம் ஆத்மியில் இருந்தும் விலகல்!
புதுடில்லி: டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறார்.
டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் போக்குவரத்து அமைச்சராக அசோக் கெலாட் இருந்து வந்தார். இவர் இன்று (நவ.,17) டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டில்லி முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான அதிஷி ஆகியோருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டில்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன்.
யமுனை நதியை சுத்தப்படுத்த தவறிவிட்டோம். மக்களுக்கு ஒரு தூய்மையான யமுனை நதியை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தோம். ஆனால் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற தவறிவிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விரைவில் பா.ஜ., கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.