வேலை தரும் வேளை 5600 பேருக்கு பணி: நெகிழ்ச்சியில் சிவசங்கரன்
'இளைஞர்கள் வேலை தேடுபவராக இருக்கக்கூடாது. வேலை தருபவராக இருக்க வேண்டும்' என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரன் சொன்ன வார்த்தை எனக்கு வேதவாக்காக தெரிந்தது. அப்போது நான் கல்லுாரி மாணவர். கல்லுாரி படிப்பு முடிந்ததும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தர முடிவு செய்து 2008ல் ஆரம்பித்தேன். இந்த 16 வருஷத்தில் 5600 பேருக்கு வேலை வாங்கித்தந்துள்ளேன் என நினைக்கும் போது ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது. இதற்கு தினமலர் சண்டே ஸ்பெஷலில் என் சேவை குறித்து வந்த கட்டுரையும் ஒரு காரணம்' என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் 38 வயதான சிவசங்கரன்.
மதுரை அண்ணாநகரில் ஐ.டி., நிறுவனம் நடத்தி வரும் இவர், வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ற வேலையை பெற்றுத்தருவதை சேவையாக செய்து வருகிறார். இதற்காக வேலை தேடுபவரிடமோ, வேலை தருபவரிடமோ எந்த கமிஷனும், பணமும் பெறுவதில்லை என்கிறார் சிவசங்கரன். சண்டே ஸ்பெஷலுக்காக சந்தித்தோம்.
'' என் சேவை குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலில் வெளியான கட்டுரையை படித்து பல நிறுவனங்கள், இளைஞர்கள் என்னை தொடர்பு கொண்டனர். இதன்மூலம் நுாற்றுக்கணக்கானோருக்கு வேலை வாங்கித்தர முடிந்தது. என்னால் வேலை கிடைத்த சிலர், தங்கள் கிராமங்களில் சண்டே ஸ்பெஷல் கட்டுரையை மந்தை, கோயில் பொது இடங்களில் ஒட்டியுள்ளதை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. பலர் வேலையில் சேரும்போதும், நிறுவனங்கள் வேலை தரும்போதும் எனக்கு அனுப்பும் மெசேஜை படிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கும்.
நம்மைச்சுற்றி ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. வேலை கேட்டு வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து, நேர்முகத்தேர்வு நடத்தி, தேவைப்பட்டால் எழுத்து தேர்வும் வைத்து ஆட்களை தேர்வு செய்து தகுதியானவர்களாக நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறேன். ஐ.டி., அக்கவுண்டன்ட் பணிக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அதற்கேற்ற திறமை பலருக்கு இல்லை. படிப்புக்கேற்ற அறிவோ, ஆங்கில புலமையோ இருப்பதில்லை.
திறமையானவர்கள் கிடைத்தாலும் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் இருப்பதில்லை. பணியில் சேர்ந்தவுடனே சலுகை எதிர்பார்க்கிறார்கள். பணி நேரத்தை கணக்கிட்டு மட்டுமே உழைக்கிறார்கள். அதை தாண்டி சிந்திப்பதில்லை. ஆரம்பத்தில் நான் ஒவ்வொரு கம்பெனியாக ஏறி, இறங்கி 'உங்களுக்கு ஆட்கள் தேவையா' எனக் கேட்டு, ஆட்களை அனுப்பிவைத்தேன். இன்று அவர்களாகவே எங்களுக்கு இவ்வளவு ஆட்கள் தேவை என அழைப்பு விடுக்கும் அளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கிறேன்.
ரோட்டரி மூலம் சில சமூகப்பணிகளையும் செய்து வருகிறேன். கடந்தாண்டு மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியரை விமானத்தில் சென்னை அழைத்துச்சென்றேன். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். 14 பொது கழிப்பறைகளை ரோட்டரி சார்பில் கட்டிக்கொடுத்துள்ளேன். என் அடுத்த இலக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதுதான்'' என்றார்.
இவரை வாழ்த்த 99449 74003