திருப்புகழுக்கு ஒரு தியா
மழலைச் சொல் யாழினும், குழலினும் இனிது. மழலைச் சொல்லே இனிது என்றால் பாடினால் அதனினும் இனிதுதானே. பாடியும், பேசியும் தமிழக ஆன்மிக மேடைகளை தனதாக்கி அசத்துகிறார் சிறுமி தியா.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட தியா சென்னையில் 3ம் வகுப்பு படிக்கிறார். 7 வயதே ஆகும் தியா, மேடையில் பாடும் போது கேட்டால் நம் மனம் பக்தி பரவசமாகும். ஆன்மிகம் கலந்த கணீர் குரல், மழலை முகபாவங்கள், உடல் மொழி அனைத்தும் காண்போரை ஆச்சரியப்பட வைக்கும் அதிசயமாக இருக்கும்.
திருப்புகழ் தியா, குட்டி கே.பி.சுந்தராம்பாள் என்றும் அன்பாக அழைக்கப்படுகிறார்.
தியாவின் முதல் மேடை 5 வயதில் ஆரம்பித்தது. தீவிர முருக பக்தையான இவர் முதல் கச்சேரியே முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று தொடங்கியிருக்கிறது. திருப்புகழ், அறுபடைவீடு முருகன் பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, தேவாரம், திருவாசகம் என்று மனம் விரும்பி பாடி பல்வேறு கோயில்களில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.
முதலில் பாடல்கள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த தியா, பாடல்கள் குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டுமென்பதால் அதற்கான ஆன்மிக, அறிவியல் சார்ந்த விளக்கம், பாடல்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், விளக்கக் கதைகள் கூறிப் பாடுகிறார். இதுவே தியாவின் தனிச்சிறப்பு.
சென்னையில் வடபழனி முருகன் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்பட இவரின் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதுவரை 60 க்கும் மேற்பட்ட மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
குழந்தையின் பெயர் மட்டும் போதும்; எங்களின் பெயர்களை பதிவிட வேண்டாமென பெருமையாக தன் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தியாவின் தாயார் கூறியதாவது :
தியாவின் பாட்டிதான் முதல் குரு. குழந்தையாக இருக்கும் போதே அவளுக்கு கதைகள், சின்ன சின்ன ஸ்லோகங்கள் என்று ஆரம்பித்து பின்பு, பாடல்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக திருப்புகழ் பாடல்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் பக்திப் பாடல்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
தியாவிற்கு இத்தனை மேடைகள் அமைந்திருப்பதும், மக்கள் ரசித்து அவளைப் பாராட்டி வாழ்த்து தெரிவிப்பதும், ஆசியளிப்பதும் முருகனின் திருவருளாகவே கருதுகிறோம்.
படிப்பிலும் இசையிலும் சிறந்து விளங்கும் குழந்தையாக வளர்ந்து வருகிறாள். அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறோம். அவளது கனவு, லட்சியத்தை அடைய உறுதுணையாக இருப்பதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம்.
தியாவை குட்டிமுருகன், குட்டிமீனாட்சி என்றும் மக்கள் கொஞ்சுவது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.