வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

செயின்ட் லுாசியா: நான்காவது 'டி-20' போட்டியில் எவின் லீவிஸ், ஷாய் ஹோப் அரைசதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இங்கிலாந்து 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், வில் ஜாக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது ஜாக்ஸ் (25) அவுட்டானார். அபாரமாக ஆடிய சால்ட் (55) அரைசதம் கடந்தார். கேப்டன் பட்லர் (38) நம்பிக்கை தந்தார். ஜேக்கப் பெத்தெல் அரைசதம் விளாசினார். லிவிங்ஸ்டன் (4) ஏமாற்றினார். சாம் கர்ரான் (24) 'ரன்-அவுட்' ஆனார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன் எடுத்தது. பெத்தெல் (62) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (68), ஷாய் ஹோப் (54) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. நிக்கோலஸ் பூரன் (0), ஷிம்ரன் ஹெட்மயர் (7) ஏமாற்றினர். கேப்டன் ராவ்மன் பாவெல் (38) நம்பிக்கை அளித்தார். டான் மவுஸ்லி வீசிய 19வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட ரூதர்போர்டு வெற்றியை உறுதி செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்து வெற்றி பெற்றுது. ரூதர்போர்டு (29), ராஸ்டன் சேஸ் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement