ராகுலை எப்படி தான், 'பாராட்டுவது?'

ஆர்.பீம்சிங், கள்ளக்குறிச்சியில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'இந்திய அரசியலமைப்பு நாட்டின் ஆன்மாவையும்,புத்தர், காந்தி, அம்பேத்கர், பிர்சா முண்டா போன்றோரின் கொள்கைகளையும் தாங்கி நிற்கிறது. நான் சிகப்பு நிறத்தில் வைத்துள்ள அரசியலமைப்பு புத்தகம் ஒன்றுமில்லாதது என, பிரதமர் மோடி கருதுகிறார். அவர் அதை படிக்காததால் அப்படி நினைக்கலாம்' என, புதுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டு, 'கலக்கி' இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்.
ராகுல், தன் கையில் வைத்துள்ள அந்த சிகப்பு நிறத்தாலான அரசியலமைப்பு புத்தகத்தை, வெறுமனே கையில் வைத்து இருக்கிறார் என்று பிரதமர் மோடி கருதுவதாகவே வைத்துக் கொள்வோம்...

அந்த சிகப்பு நிறத்தாலான அரசியலமைப்பு புத்தகத்தின், அட்டை டு அட்டை வரை, அண்ணன் ராகுல், 'கரதல' பாடமாக கரைத்து குடித்து இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்...

அந்த சிகப்பு நிறத்திலான அரசியல்அமைப்பு புத்தகத்தில், எந்த பக்கத்தில் காங்கிரஸ் கட்சி, பல ஆயிரம் கோடி மதிப்புடைய, 'நேஷனல் ஹெரால்ட்'பத்திரிகையை, இரண்டாம் பேருக்கு தெரியாமல், 'ஸ்வாஹா' செய்து கொள்ளலாம்என அனுமதித்துள்ளது என்பதை, அண்ணன் ராகுலால் எடுத்துரைக்க முடியுமா?

கவுதம சித்தார்த்த புத்தரும், காந்தியும், அண்ணல் அம்பேத்கரும், பிர்சா முண்டாவும்அந்த சிவப்பு நிற புத்தகத்தின் எந்த பக்கத்தில்,எத்தனையாவது ஷரத்தில் பொதுச் சொத்துக்களை, காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும், தங்கள் உடமையாக்கி கொள்ளலாம்என அனுமதியும், ஒப்புதலும் அளித்து இருக்கின்றனர் என்று, சற்று விபரமாக விளக்கிச் சொல்ல முடியுமா ராகுலால்?

கிட்டத்தட்ட, 2,000 கோடி ரூபாய் மதிப்புடைய அந்த நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை, கபளீகரம் செய்து முழுங்கி விட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, பிரதமர் மோடி மீது அபாண்டமாக குற்றம் சாட்டும் இவரை என்னவென்று அழைப்பது; எப்படி, 'பாராட்டலாம்' சொல்லுங்களேன்!


ஜனநாயகத்திற்கு மாற்று வேண்டுமோ?



சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்இதே பகுதியில், 'மக்களைஏமாற்றி ஓட்டுகளை பறிக்கும் சூழ்ச்சியான, பொய்வாக்குறுதிகளை கைவிட்டு, சாத்தியமான திட்டங்களை மட்டுமே அரசியல் கட்சிகள் அறிவிக்கவேண்டும்' என்றும்,'மக்களும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்காமல், மக்கள் நலனுக்கு உகந்த தலைவனுக்கே ஓட்டளிக்க வேண்டும்' என்றும், வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானது; ஆனால், நடைமுறையில் அது எந்தளவுக்கு சாத்தியம்என்பது தெரியவில்லை.

உடுத்திய வேட்டிக்கு, மாற்று வேட்டியில்லாமல்நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவை, தன் கொள்கைக்குநேர் எதிரானவர் என்று தெரிந்திருந்தும், வீடு தேடிச்சென்று, தன் காரிலேயே அழைத்துச் சென்று, மேடையில் பேச வைத்தவர், காங்கிரஸ் தலைவர் காமராஜர். அது அந்தக் காலம்!

இப்போதெல்லாம் மக்கள் அரசியல்வாதியைப்பார்த்து, 'நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள். உன் பின்னால் வந்தால் எங்களுக்குஎன்ன கிடைக்கும்?' என்றுகேட்டுத்தான் அரசியல் பற்றி, ஆட்சி பற்றி, கட்சி பற்றி முடிவு எடுக்கின்றனர்.

ஜெயிலுக்கு போனதற்காகவே ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தது, அந்தக் காலம்; அது, தியாகத்திற்கு மக்கள் காட்டிய மரியாதை!

இப்போதும் ஜெயில் சென்று வந்தவர்களுக்கு, ஓட்டளிக்க தயாராய் இருக்கின்றனர் மக்களில் சிலர்! அந்த ஜெயில் வாசம்,குற்ற வழக்குக்காக, ஊழலுக்காக இருந்தால் கூடகவலைப்படுவதில்லை!

கை வசம், 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்இருந்தபோதும் கூட, அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுஇருக்கிறார். எப்படி... இதுவரை, 'உலகத்திற்காகஅமெரிக்கா' என்றிருந்ததை,'அமெரிக்காவிற்காக உலகம்'என்ற சுயநல சிந்தனையைஅமெரிக்க மக்கள் மனத்தில்ஆழப் பதித்து விட்டதால் தானே! இத்தனைக்கும், முழுஅமெரிக்காவும், வெளி உலகில் இருந்து வாழ்வு தேடி வந்தவர்களால் நிரம்பிவழியும் நாடு!

அவ்வளவு துாரம் போவானேன்!

டில்லி முதல்வராக இருந்தகெஜ்ரிவால், ஊழலுக்காகத்தான் ஜெயிலுக்குப் போனார்.உண்மையில் அவர் பரிசுத்தமானவர் என்றால், ஜெயிலில் இருக்கும்போதேமுதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதைவிட்டு, ஜெயில் வாசம் முழுதும் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, பல் பிடுங்கிய பாம்பாக வெளிவந்த பின்,'முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக' நாடகம் ஆடினார். 'இனி, தேர்தலில் நின்று மக்கள்தீர்ப்போடு தான் முதல்வராவேன்' என்று, சவால் வேறு விடுத்துஇருக்கிறார்.

எப்போது ஜனநாயகம்,'பணநாயகம்' ஆகியதோ, அப்போதே, தியாகம், நீதி,நேர்மை எல்லாம் ஓடி ஒளிந்து விட்டன.

இந்தக் கட்சி, அந்தக் கட்சிஎன்றில்லாமல், எல்லா கட்சிகளும் ஒன்றாகத்தான்இருக்கின்றன.

போகிற போக்கைப் பார்த்தால், ஜனநாயகத்திற்கு மாற்று முறை தேட வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மிகவும் வேதனை தான்!



சி.வி.பாலகிருஷ்ணன், பெங்களூரில் இருந்து எழுதுகிறார்: வழக்கமான நடைமுறையான, கலெக்டர் குறைதீர்ப்பு முகாம்கள், பல காலமாக நடந்து வந்தாலும்,அவற்றின் பலன், 'ஜீரோ' தான்.

கோவை மாநகராட்சியில்,என் வீட்டு தண்ணீர் வரி, 3,687 ரூபாய். 'ஆன்லைனில்'கட்டி விட்டோம்.

பில் கலெக்டர், 'எங்களுக்கு எந்த 'அட்வைசும்' வரவில்லை' என்று,அதே தொகையை கட்டச் சொன்னார்; பணமாகவும் கட்டி விட்டோம்.

பின் ஒவ்வொரு வாரமும்,வங்கி ஸ்டேட்மென்ட் முதற்கொண்டு அனைத்தையும் நகலெடுத்து கொடுத்து, கிட்டத்தட்ட, 10 முறை, நேரில் சந்தித்தோம்.ஆணையர், மேயர், துணைமேயர் என எல்லாரும், சம்பந்தப்பட்ட உதவியாளரை கூப்பிட்டு சொல்வர்; அவ்வளவு தான்!

கடைசியாக வந்த பதிலில்,'உங்கள் பணம் எங்களுக்குவரவில்லை' என்று பதில் எழுதியிருக்கின்றனர். எச்.டி.எப்.சி., வங்கி ஸ்டேட்மென்ட்டில், கோவை கார்ப்பரேஷன் கணக்கில்வரவு வைத்துள்ளதாக காண்பிக்கிறது. நான் என்ன செய்வது?

நானும், என் வயதை பொருட்படுத்தாமல், பலமுறை நேரில் பார்த்தும் முடியவில்லை. மிகவும் வேதனை ஆக உள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசு உள்ளது; அதற்கு பதிலாக, மக்களை அடிமை களாக நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

Advertisement