வட்டி கட்ட முடியாமல் தவிக்கும், பஞ்., தலைவர்கள்!

''குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தலாமான்னு கொந்தளிச்சுட்டாருங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''துணை முதல்வர் உதயநிதி, சமீபத்துல துாத்துக்குடி போயிருந்தாரே... அப்ப, தி.மு.க., சார்புல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க...

''தொகுதி எம்.பி., யான கனிமொழி வெளிநாடு போயிருந்தாங்க... அவங்க ஒப்புதல் இல்லாம, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறது தெரிஞ்சதும், முதல்வர் கொதிச்சு போயிட்டார்...

''இதை அறிந்ததும், அமைச்சருக்கு போன் போட்ட முதல்வர், 'குடும்பத்துல பிரச்னையை ஏற்படுத்துறீங்களாம்மா'ன்னு கோபமா கேட்டு, இணைப்பை துண்டிச்சுட்டாராம்...

''இதனால, பதறி போன அமைச்சர், மறுநாள் உள்ளூர்ல அவங்களுக்கு இருந்த நிகழ்ச்சிகளை ரத்து பண்ணிட்டு, அரியலுார் மாவட்ட நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்ட முதல்வரை போய் பார்த்து, 'இனி, இந்த மாதிரி குளறுபடி நடக்காம பார்த்துக்கிறேன்'னு விளக்கம் தந்திருக்காங்க... இதுல, முதல்வரும் சமாதானம் ஆகிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''தாபாக்கள் எல்லாம் பார்களா மாறிட்டுல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், சங்ககிரி, கொங்கணாபுரம், இடைப்பாடி, பூலாம்பட்டி, தேவூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள்ல, 50க்கும் மேற்பட்ட இரவு நேர, தாபா ஹோட்டல்கள் செயல்படுது... இதுல பல தாபாக்கள், பார்களாவே மாறிட்டு வே...

''சில நேரங்கள்ல இங்க சரக்கு அடிச்சிட்டு, அடிதடி தகராறும் நடக்கு... இது பத்தி போலீசாருக்கு தகவல் போனாலும், மாமூல் கரெக்டா போயிடுறதால, எதையும் கண்டுக்க மாட்டேங்காவ வே...

''இதனால, 'தாபாக்கள்ல பெரிய அளவுல அசம்பாவிதம் நடந்தால் தான், போலீஸ் அதிகாரிகள் பார்வை இந்த பக்கம் திரும்புமா'ன்னு இந்த பகுதி மக்கள் எல்லாம் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கடனுக்கு வட்டி கட்ட முடியாம தவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''திருவள்ளூர் மாவட்டத்துல, 14 ஒன்றியங்களின் கீழ், 526 ஊராட்சிகள் இருக்கு... ஒவ்வொரு வருஷமும், ஒன்றியத்துக்கு, ஏழு ஊராட்சிகள் வீதம் தேர்வு செய்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் கீழ் சாலை போடுறது, குளம் வெட்டுறது, கழிவு நீர் வடிகால் அமைக்கிறது, அங்கன்வாடி மையம் கட்டுறது போன்ற பணிகளை செய்யணும் பா...

''இதுக்காக மாவட்ட நிர்வாகம், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும், 3 கோடியில இருந்து, 9 கோடி ரூபாய் வரைக்கும் நிதி ஒதுக்குது... மேற்கண்ட வளர்ச்சி பணிகளை, ஊராட்சி தலைவர்கள் தான் பொறுப்பெடுத்து செய்யணும் பா...

''பல ஊராட்சிகள்லயும் இந்த பணிகளை செஞ்சு, ஒரு வருஷம் முடிஞ்சும் ஒன்றியங்கள்ல இருந்து, பில் தொகை வரல... பல தலைவர்கள், லட்சக்கணக்குல கடன் வாங்கி தான் இந்த பணிகளை செஞ்சிருக்காங்க பா...

''அதுக்கு வட்டி கட்ட முடியாம தவிக்கிறாங்க... 'இன்னும் ஒரு மாசம் தான் எங்களுக்கு பதவிக்காலம் இருக்கு என்பதால, கடன் தந்தவங்க நெருக்கடி தராங்க... எங்களால பதில் சொல்ல முடியல'ன்னு புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

Advertisement