25 லட்சம் ரூபாய் லஞ்சம்; ரயில்வே கோட்ட மேலாளர் கைது!
புதுடில்லி; அபராதத்தை குறைக்க, 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிழக்கு கடற்கரை ரயில்வே உயரதிகாரி கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று கிழக்கு ரயில்வே கோட்டத்தில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் குறித்த காலத்தில் பணிகளை முடிக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தனர். புனேவை சேர்ந்த ஒரு நிறுவனமும் இதே குற்றச்சாட்டில் சிக்கியது.
மேலும் ஒப்பந்தப்புள்ளி மேற்கொண்டு பணிகளை செய்த வகையில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட வேண்டிய ரூ.3.17 கோடி நிலுவையில் இருந்ததாகவும் தெரிகிறது. குறித்த காலத்தில் பணிகளை முடிக்காததால் விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்கவும், நிலுவைத் தொகையை விடுவிக்கவும் கிழக்கு கடற்கரை ரயில்வே மேலாளர் சௌரவ் பிரசாத்தை நிறுவன உரிமையாளர்கள் அணுகி உள்ளனர். அப்போது சௌரவ் பிரசாத் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கேற்ப, அவர் அபராத தொகையை குறைத்து நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சொன்னபடி காரியத்தை செய்து முடித்துவிட்டதால் பேசியபடி அந்த பணத்தை நேற்று (நவ.16) மும்பையில் பெற்றுக் கொள்ள ரயில்வே மேலாளர் சௌரவ் பிரசாத் தயாராக இருந்தார்.
இது பற்றிய ரகசிய தகவல் அறிந்த சி.பி.ஐ., அதிகாரிகள் கையும், களவுமாக பிடிக்க எண்ணினர். அதற்காக ரகசியமாக சௌரவ் பிரசாத்தை கண்காணித்த சி.பி.ஐ., அதிகாரிகள் 25 லட்சம் ரூபாய் லஞ்சத்தை வாங்கும் போது கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர் மீதும், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீதும் சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.87.06 லட்சம், ரூ.72 லட்சம் மதிப்புள்ள நகை, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.