இந்தியா-மலேசியா மோதல்: சர்வதேச நட்பு கால்பந்தில்
ஐதராபாத்: நட்பு கால்பந்தில் இன்று இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன.
இந்தியா, மலேசியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு கால்பந்து போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட சீனியர் வீரர் சந்தேஷ் ஜிங்கன், 10 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்புவது பலம்.
உலக தரவரிசையில் 125வது இடத்தில் உள்ள இந்திய அணி, இந்த ஆண்டு விளையாடிய 10 போட்டியில், 6ல் தோல்வியடைந்தது. நான்கு போட்டிகள் 'டிரா'வில் முடிந்தன. இன்று, உலக தரவரிசையில் 133வது இடத்தில் உள்ள மலேசியாவை வீழ்த்தினால் நடப்பு ஆண்டில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யலாம். தவிர இது, நடப்பு ஆண்டில் இந்தியா பங்கேற்கும் கடைசி போட்டியாகும். இதன்பின், அடுத்தாண்டு மார்ச் மாதம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடும்.
கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர் மனோலா மார்க்வெஸ் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில். மூன்று போட்டியில், 2 'டிரா', ஒரு தோல்வியை பதிவு செய்தது.
போட்டி நடக்கும் ஐதராபாத் மைதானத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இன்டர்கான்டினென்டல் கோப்பையில் இந்தியா பங்கேற்றது. இதில் சிரியாவிடம் தோல்வியடைந்த இந்தியா, மொரீசியசிற்கு எதிராக 'டிரா' செய்திருந்தது.
இதுவரை மோதல்கடந்த 1957ல் கோலாலம்பூரில் நடந்த நட்பு போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. இதில் இந்தியா (3-0) வென்றது. கடைசியாக, கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த மெர்டேக்கா தொடரின் அரையிறுதியில் மோதின. இதில் மலேசியா 4-2 என இந்தியாவை வென்றது. ஒட்டுமொத்தமாக 32 முறை மோதின. இதில் இரு அணிகளும் தலா 12ல் வெற்றி பெற்றன. எட்டு போட்டிகள் 'டிரா' ஆனது.