இந்தியாவிடம் வீழ்ந்தது ஜப்பான்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில்

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 3--0 என, ஜப்பானை வீழ்த்தியது.
பீஹாரில், பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து என 6 அணிகள் பங்கேற்கின்றன.

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீபிகா 2 (47, 48வது நிமிடம்), துணை கேப்டன் நவ்னீத் கவுர் (37வது) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
மற்ற லீக் போட்டிகளில் மலேசியா (2-0, எதிர்: தாய்லாந்து), சீனா (2-0, எதிர்: தென் கொரியா) அணிகள் வெற்றி பெற்றன.


இந்தியா முதலிடம்: முதல் நான்கு போட்டியில் மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, சீனாவை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியது. பட்டியலில் முதலிடத்தை (15 புள்ளி) பெற்றது. அடுத்த மூன்று இடங்களை கைப்பற்றிய சீனா (12 ), மலேசியா (6), ஜப்பான் (6) அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. அரையிறுதியில் (நவ. 19) இந்தியா-ஜப்பான், சீனா-மலேசியா அணிகள் மோதுகின்றன. பைனல், நவ. 20ல் நடக்க உள்ளது.

Advertisement