சொகுசு விடுதி நீச்சல் குளத்தில் 3 இளம்பெண்கள் உயிரிழப்பு

மங்களூரு: மங்களூருக்கு சுற்றுலா வந்த மூன்று இளம்பெண்கள், சொகுசு விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர்கள் பார்வதி, 20, கீர்த்தனா, 21 மற்றும் நிஷிதா, 21. தோழியரான மூன்று பேரும், வார விடுமுறையை கொண்டாடும் நோக்கில், நேற்று முன்தினம் தட்சிண கன்னடாவின் மங்களூருக்கு சுற்றுலா வந்தனர்.

மங்களூரு புறநகரின் உச்சிலா அருகில் உள்ள கடற்கரை சொகுசு விடுதியில் தங்கினர். நேற்று காலை 10:00 மணியளவில், மூவரும் விடுதியில், 6 அடி ஆழம் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி விளையாடினர்.

அப்போது, ஒரு இளம்பெண் நீரில் மூழ்கினார். இவரை காப்பாற்ற முயற்சித்த தோழியர் இருவரும் நீரில் மூழ்கினர்; இதில் மூவருமே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினரின் உதவியுடன், இளம்பெண்களின் உடல்களை மீட்டனர்.

மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் அளித்த பேட்டி:

உயிரிழந்த மூன்று பெண்களும் இறுதி ஆண்டு பொறியியல் படிக்கின்றனர். நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கியதே, அசம்பாவிதத்துக்கு காரணம்.

சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் லைப் கார்டுகள் யாரும் இருக்கவில்லை.

நீச்சல் குளத்தின் ஆழம் குறித்த தகவல் பலகையும் வைக்கவில்லை. நீரில் மூழ்கிய பெண்கள் கூச்சலிட்டும், காப்பாற்ற யாரும் இல்லை. இது தொடர்பாக, விசாரணை நடத்துகிறோம்.

சொகுசு விடுதி உரிமையாளர் மனோகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விடுதி லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து, 'சீல்' வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement