இதே நாளில் அன்று

நவம்பர் 18, 1908

சென்னை, வெம்பாக்கத்தில் அய்யங்கார் குடும்பத்தில், 1844, ஜனவரி மாதம் பிறந்தவர் பாஷ்யம் அய்யங்கார். இவர், சென்னையில் பட்டப்படிப்பு வரை முடித்தார். பதிவாளர் அலுவலகத்தில், சார் - பதிவாளராக பணியாற்றிய இவர், பின், சட்டப் படிப்பை முடித்தார். அட்வகேட் ஜெனரலாக இருந்த, ஆங்கிலேயர், ஓ.சல்லிவனிடம் ஜூனியராக பயிற்சி பெற்றார். இவர், அலங்காரமற்ற வார்த்தைகளில், அழுத்தமான கருத்துக்களை, எளிய ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார். கையில் துண்டு சீட்டு இல்லாமல், துல்லியமான கருத்துக்களையும் வாதிடுவதில் வல்லவர்.

குற்ற வழக்குகளில் ஆர்வமில்லாத இவர், சொத்து வழக்குகளில் நிபுணராக திகழ்ந்தார். படிப்படியாக தலைமை வழக்கறிஞரானார். பின், சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். பிரிட்டிஷ் வழக்கறிஞர்களின் எதிர்ப்புகளையும் மீறி, 1901, மார்ச் 8ல், தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டு, இரண்டாண்டு, ஒன்பது மாதங்கள் பணியாற்றி, வரலாற்று சிறப்பு மிக்க பல முக்கிய தீர்ப்புகளை அளித்தார். ஓய்வுபெற்ற பிறகும், வழக்கறிஞராக இருந்தார். வாதிடும் போதே, தன், 64வது வயதில், 1908ல் இதே நாளில் மறைந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிலையாக நிற்கும், வி.பி.அய்யங்கார் மறைந்த தினம் இன்று!

Advertisement