நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகைதாரர் நெல் வாங்க மறுப்பு; புதிய அரசாணையால் அதிர்ச்சி

நிலக்கோட்டை, : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டாதாரர்களின் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் அரசாணையால் குத்தகைதாரர் நெல் வாங்க மறுக்கப்படும் நிலையில் இதன் ஆணையை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

நிலக்கோட்டை பகுதியில் விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 3000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை தொடங்கி உள்ளன.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வாணிபக் கழகம் சார்பில் விளாம்பட்டியில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது. இதனிடையே சொந்த நில பட்டாதார்கள் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயனடைய முடியும் என்ற அரசாணையால் குத்தகை ,உழவடை செய்யும் விவசாயிகள் வழங்கும் நெல் வாங்க மறுக்கப்படுகிறது .

இதனால் இவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

விளாம்பட்டி பென்னிகுக் வைகை பாசன விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: இந்த பகுதியில் 60 சதவீதம் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஒத்தி, குத்தகை ,உழவடை செய்யும் விவசாயிகள் நில உரிமையாளர்களோடு ஏற்படுத்திய ஒப்பந்த பத்திரம் பயன்படுத்தி வி.ஏ.ஓ.,விடம் அடங்கல் சான்றிதழ் பெற்று பரிந்துரை படிவம் அளித்ததன் மூலமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களுடைய நெல்லை விற்று பயனடைந்து வந்தனர். தற்போது சொந்த நில பட்டாதாரர்கள் மட்டுமே பயனடைய முடியும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடை நெல்லை அரசு எடுத்துக் கொள்ளாவிட்டால் வெளிமார்க்கெட்டில் வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்க நேரிடும். இதனால் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டு விவசாயத்தை கைவிடும் நிலை உருவாகும்.

இதன் காரணமாக விளைநிலங்கள் தரிசாகும் நிலை ஏற்படும் என்றார்.

Advertisement