திருத்தணியில் அடுக்குமாடி வீடுகள் வாங்க ஆர்வமில்லை 3,672 வீடுகளில் 621 பேர் மட்டுமே முன்பதிவு
திருத்தணி:திருத்தணி தாலுகாவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக முருக்கம்பட்டு பகுதியில், 135.22 கோடி ரூபாயில், 1,040 அடுக்குமாடி குடியிருப்புகள், தாழவேடு பகுதியில், 67.34 கோடி ரூபாயில், 520 வீடுகளும், அருங்குளம் பகுதியில், 276.77 கோடி ரூபாயில், 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் என 3,672 வீடுகள் கட்டும் பணி 2021ல் துவங்கியது.
முருக்கம்பட்டு மற்றும் தாழவேடு ஆகிய பகுதிகளில், தரைத்தளம் மற்றும் 4 அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அருங்குளம் பகுதியில் தரைத்தளம் மற்றும் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். வீடுகள் ஒதுக்கீடு கோரும் நபரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்குள் இருக்க வேண்டும்.
ஒரு வீட்டின் மதிப்பு 13 லட்சம் ரூபாய். இதில் மத்திய அரசு 1.50 லட்சம், மாநில அரசு 7 லட்சம் என மொத்தம் 8.50 லட்சம் ரூபாய் மானியம். மீதம், 4.50 லட்சம் ரூபாய் பயனாளிகள் செலுத்தி வீடுகள் பெறலாம்.
பயனாளிகள் ஆதார் , ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுவரை, 621 பேர் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர். பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை, ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளதாலும், லிப்ட் வசதி போன்ற வசதிகள் இல்லாததால் பயனாளிகள் வீடுகள் வாங்க தயங்குகின்றனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியத்தால் முருக்கம்பட்டு, தாழவேடு மற்றும் அருங்குளம் ஆகிய மூன்று பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் நவீன வசதிகளுடன் ஒவ்வொரு வீடும், 410 சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ளன.
தற்போது வீட்டிற்குள் வண்ணம் பூசுதல், மின் இணைப்பு, கழிப்பறை தொட்டிகள் கட்டும் பணிகள், 3 மாதத்திற்குள் முழுமையாக முடிவடையும்.
இதுவரை முருக்கம்பட்டு; 138 பேரும், தாழவேடு;183 பேரும், அருங்குளம்; 300 பேரும் என மொத்தம், 621 பேர் மட்டும் வீடுகள் வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
முருக்கம்பட்டு மற்றும் தாழவேடு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'லிப்ட்' வசதியில்லை. அருங்குளம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'லிப்ட்' வசதி ஏற்படுத்தியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.