சுவர்களில் மரங்கள் வளர்க்கும் மதுரை அரசு மருத்துவமனை கட்டடங்கள் வலுவிழக்கும் அபாயம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து பிரிவு வளாகத்தின் பக்கவாட்டு சுவர்களில் ஆங்காங்கே மரங்கள் வளர்வதால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு வலுவிழக்கும் அபாயம் உள்ளது.
விபத்தில் அடிபடும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தென்மாவட்ட நோயாளிகளுக்காக 2012 ல் தீவிர விபத்து பிரிவு சிறப்பு வளாகம் துவக்கப்பட்டது. இங்கு எலும்பு முறிவு நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கு, அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகளும், இன்சூரன்ஸ் வார்டு, எலும்பு வங்கி, ரத்த வங்கிகள் செயல்படுகின்றன.
எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இக்கட்டடத்தின் பின்பகுதி சுவர்களில் சத்தமின்றி நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த் தொட்டியில் இருந்தோ அல்லது ஏசி வடிகால் குழாய்களில் இருந்தோ சுவர்களில் தொடர்ந்து நீர் கசிந்து பாசிபடிகிறது.
இந்த நீர்க்கசிவு தண்ணீரை பயன்படுத்தி ஜன்னல் சன்ேஷட் பகுதிகளில் ஆங்காங்கே அரச மரங்கள் வளர்கின்றன. தரையில் வழியும் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் தடையின்றி உற்பத்தியாகின்றன.
மழைநீர் வடிகால் குழாய்கள் ஆங்காங்கே மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளன. பெரும்பாலான மூடிகள் உடைந்து காணப்படுகிறது. தண்ணீர் கசிவை நிரந்தரமாக நிறுத்தி சுவர்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.