மதுரையில் மேம்பால பணிகளால் விரைவில் போக்குவரத்து மாற்றம்; இரு இடங்களில் ஏற்பாடு

மதுரை: மதுரையில் நடைபெறும் மேம்பால பணிகளால் இந்த வாரம் 2 இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.


மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல இடங்களில் மேம்பால பணிகள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமாரன் இப்பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.


மேலமடை சந்திப்பில் சிவகங்கை ரோட்டில் நடைபெறும் மேம்பால பணியில் துாண்களிடையே மேல்தளம் அமைக்க வேண்டியுள்ளது. இதற்காக முட்டுக் கொடுக்க தரைத்தளத்தில் இரும்பு கட்டுமானம் அமையும். அதனால் போக்குவரத்து சிரமம் ஏற்படும் என்பதால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத் துறை போலீஸ் அனுமதியை வேண்டியுள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு முன்பாக மாற்றி அமைக்கப்படும் போக்குவரத்து எளிதாக இருப்பதற்காக மாற்று ரோடுகளை தயார் செய்யும் பணியும் ஜரூராக நடக்கிறது. அண்ணாநகரில் இருந்து வண்டியூர் - ரிங்ரோடு செல்லும் பாதையும், அதற்கு இணையாக வைகை வடகரையில் செல்லும் ரோடும் சீரமைக்கப்பட்டுள்ளது. வைகை வடகரை ரோடு ரிங்ரோட்டில் இணையும் இடத்தில் 300 மீட்டருக்கு பணிமுடியாமல் இருந்தது. அதனை விரைந்து சரிசெய்துள்ளனர்.

அதேபோல கோரிப்பாளையம் பகுதியில் அமையும் மேம்பால பணியில் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பிரிவு கீழிறங்கும் வகையில் பாலம் அமைகிறது. அதன் கீழ் பந்தல்குடி கால்வாய் வைகையை நோக்கி வரும்போது ரோட்டை கடக்கும் இடத்திலும் பணிகள் நடக்க உள்ளன. தற்போதுள்ள இக்கால்வாய் பாலம் 25 மீ., அகலத்தில் உள்ளதை மாற்றி 40 மீ., அகலத்திற்கு ரோட்டில் 'ஸ்லாப்'கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக தற்போதுள்ள ரோட்டில் போக்குவரத்தை மாற்றாமல் பாலத்தின் ஒரு பகுதியில் ஸ்லாப் அமைக்க உள்ளனர். மேலும் சிம்மக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் டூவீலர் போன்ற வாகனங்கள் திருமலைராயர் படித்துறை ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டு வைகையின் வடகரையில் செல்லும் வகையில் மாற்றப்பட உள்ளது. இதற்கான போலீஸ் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை இப்பகுதியில் இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும்.

Advertisement