சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; விசாரிக்க சிறப்பு குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!
சென்னை: சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இச்சம்பவம் குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டால் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் கூட, வழக்கு முடிய ஆகலாம். வழக்கை தமிழக போலீசாரே விசாரிக்கலாம்.
* ஒரு வாரத்திற்கு ஒரு முறை விசாரணை என்ன கட்டத்தில் இருக்கிறது என்ற விவரத்தை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பிக்க வேண்டும்.
* சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கிற்கான சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும்.
* சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
* சிறப்பு புலனாய்வு குழு தினம் தோறும் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.