ஹாக்கி: பைனலுக்கு செல்லுமா இந்தியா * அரையிறுதியில் ஜப்பானுடன் மோதல்

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது.
உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் இருந்த போதும், லீக் சுற்றில் இந்திய அணி 100 சதவீத வெற்றி பெற்றது. 5 வெற்றியுடன் மொத்தம் 15 புள்ளி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று, பட்டியலில் 4வது இடம் பிடித்த, 'நம்பர்-11' அணியான ஜப்பானை சந்திக்கிறது.
'நடப்பு சாம்பியன்' இந்தியாவை பொறுத்தவரையில் தீபிகா அதிகபட்சம் 10 கோல் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார். இது மீண்டும் தொடரலாம். இவருடன் சங்கீதா (4 கோல்), பிரீத்தி (3), மணிஷா (2), லால்ரெம்சியாமி (2), நவ்னீத் கவுர் (2), கேப்டன் சலிமா (1) என பலரும் கோல் அடிப்பது பலம்.
தவிர, 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். கடைசி லீக் போட்டியில் 3-0 என ஜப்பானை வீழ்த்தியது, இன்று நம்பிக்கையுடன் செயல்பட உதவும்.
ஜப்பான் அணி லீக் சுற்றில் மலேசியாவை மட்டும் வென்றது. 2 போட்டிகளை 'டிரா' செய்தது. 5 போட்டியில் 5 புள்ளி மட்டும் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இத்தொடரில் இதுவரை 6 கோல் மட்டும் அடித்தது பலவீனம். மியு ஹேஸ்ஹவா (2) அணிக்கு ஆறுதல் தருகிறார்.

Advertisement