பதிவு எண் பெறாத லாரி மோதி பெண் பலி
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கத்தில், பதிவு எண் பெறாத புது லாரி மோதியதில், பெண் ஒருவர் பலியானார்.
மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், கலைஞர் சாலையைச் சேர்ந்தவர் தனபாக்கியம், 45; வீட்டு வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 7:30 மணியளவில், வடக்குப்பட்டு சாலையிலிருந்து மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் சாலையைக் கடந்தார். அப்போது, வடக்குப்பட்டு சாலையிலிருந்து கோவிலம்பாக்கம் செல்ல திரும்பிய லாரி, தனபாக்கியம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது, லாரி ஏறி இறங்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தனபாக்கியம் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய லாரி சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளதும், பதிவு எண் பெறவில்லை என்பதும் தெரிந்துள்ளது.