100 நாள் வேலை வழங்கக்கோரி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வங்கி கடன், மகளிர் உரிமைத் தொகை, சிறு தொழில் துவங்க வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

கொளம்பாக்கம் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு:

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வையாவூர் ஊராட்சியில், கொளம்பாக்கம் கிராம மக்களுக்கு, ஏழு மாதங்களாக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை.

பணி வழங்காததை கண்டித்து, போராட்டம் நடத்த உள்ளோம். இதேபோல், புக்கத்துறை, மெய்யூர் ஊராட்சிகளிலும் வேலை வழங்கப்படவில்லை. இதனால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இம்மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

ஒழலுார் மக்கள் போராட்டம்

காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், ஒழலுார் ஊராட்சியில், கிராம மக்கள் பெரும்பாலானோருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணிகள் வழங்கப்படவில்லை.இதனை கண்டித்து, நேற்று காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒழலுார் கிராம பெண்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், நுாறு நாள் வேலை கேட்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம், கிராம மக்கள் வேலை வேண்டி மனு அளித்தனர்.

Advertisement