நீர்நிலைகளில் கழிவுநீர் கொட்டும் லாரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கூடுவாஞ்சேரி: நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. இங்கு, தனிநபர் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை, தனியார் கழிவுநீர் வாகனம் வாயிலாக அகற்றி வருகின்றனர்.

நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் ராணி கூறியதாவது:



நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் திறந்த வெளியில் மலம் கழித்தால், 200 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உரிமை பெற்ற கழிவுநீர் வாகனம் வாயிலாகவே சுத்தம் செய்ய வேண்டும். வீடுகளில் இருந்து பெறப்படும் கழிவுநீரை அகற்றும் கழிவு நீர் வாகனங்கள், தாம்பரம் நகராட்சியில் உள்ள மலக்கழிவு கசடு அகற்றும் நிலையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதை மீறி, திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய், மழை நீர் வடிகால்வாய் மற்றும் நீர்நிலைகளில் கொட்டுவதாக, பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டால், கழிவுநீர் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்கும்.

மேலும், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மனித கழிவுகளை மனிதனை கொண்டு அகற்றும் வீட்டின் உரிமையாளருக்கு, 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

கழிவு நீரை வெளியேற்ற, நகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி 14420 மற்றும் 1800 4257925 எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement