பொது கழிப்பறை இல்லாமல் கடுக்கலுார்வாசிகள் அவஸ்தை
சூணாம்பேடு: சூணாம்பேடு அடுத்த கடுக்கலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொது கழிப்பறை வசதி இல்லை.
அப்பகுதியில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், கடுக்கலுார் காலனி தெற்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, வடகிழக்கு தெரு ஓரங்கள் மற்றும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை, அப்பகுதிவாசிகள் கழித்து வருகின்றனர்.
சாலை ஓரத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்துவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
மழைக்காலத்தில் நிலைமை மேலும் மோசமடைகிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதியில் பொது கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.