புத்தேரி ஏரியில் கழிவுநீர் கலப்பு நிறுத்தம்; தீர்ப்பாயத்தில் தாம்பரம் மாநகராட்சி பதில்

சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பல்லாவரம் -- துரைப்பாக்கம், 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புத்தேரியில் கலக்கிறது.

பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், நச்சுப் பொருட்களும், கழிவுகளும் ஏரியில் தேங்கியுள்ளன. இதனால், மழை காலங்களில், ஏரியிலிருந்து நச்சு நுரை வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், 2022 ஜூலையில் அளித்த தீர்ப்பில், 'கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, புத்தேரி ஏரியில் குப்பை கொட்டப்படுவதையும், கழிவுநீர் விடப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குள், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டது.இந்நிலையில், 'புத்தேரி ஏரியை பாதுகாப்பது தொடர்பாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை, தாம்பரம் மாநகராட்சி செயல்படுத்தவில்லை.

'ஏரியின் ஒரு பகுதிக்குள் சட்டவிரோத கட்டுமானங்கள் நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்' என்று, பட்டாபிராமன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம் அளித்த உத்தரவுப்படி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை:

புத்தேரியை பாதுகாப்பது தொடர்பாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை, தாம்பரம் மாநகராட்சி செயல்படுத்தி உள்ளது. புத்தேரிக்குள் இருந்த நச்சுக் கழிவுகள், குப்பை முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.

மாநகராட்சி முழுதும் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், புத்தேரிக்குள் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும், பாதாள சாக்கடை அமைப்பில் இணைக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களில் அனுப்பி, சுத்திகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தலைமை செயலர் கண்காணிக்கணும்!

தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் விஜய் குல்கர்னி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தாம்பரம் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்தபிறகும், புத்தேரியில் கழிவுநீர் கலப்பதாக, நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. தாம்பரம் நகருக்குள் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படவில்லை என்று, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளம், வருவாய் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்ப்பாய உத்தரவுகளை அமல்படுத்தப்படுவதை, தலைமை செயலர் கண்காணிக்க வேண்டும். தீர்ப்பாய உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 20ல் நடக்கும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement