தமிழக, கர்நாடகா பஸ்கள் சேவையை பாராட்டி பூஜை செய்த கிராம மக்கள்
தமிழக, கர்நாடகா பஸ்கள் சேவையை
பாராட்டி பூஜை செய்த கிராம மக்கள்
ஓசூர், நவ. 19-
தேன்கனிக்கோட்டையில் இருந்து, சாலிவாரம் கிராமத்திற்கு, தமிழக அரசு மூலம், 41ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதேபோல், லிவாரம் கிராமம் வழியாக, இரு கர்நாடகா மாநில அரசு பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சாலிவாரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், தேன்கனிக்கோட்டை, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு, வேலை நிமித்தமாகவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரிக்கும், நோயாளிகள் மருத்துவமனைக்கும் பாதுகாப்பாக செல்ல முடிகிறது.
தமிழக, கர்நாடகா மாநில அரசு பஸ்களின், இச்சேவையை பாராட்டி, சாலிவாரம் கிராம மக்கள் சார்பில், 3 பஸ்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. முன்னதாக, 3 பஸ்களையும் சுத்தம் செய்து, அதற்கு கிராம மக்கள் வாழை மரம், மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர். மேள, தாளங்கள் முழங்க, பஸ்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும் பஸ்களுக்கு பூஜை செய்து வருவதாக, சாலிவாரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.