அதிக குழந்தை திருமணம் நடந்த பகுதியில் விழிப்புணர்வு ஏற்பாடு

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாண்டுகளில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 2021 முதல் 2023 வரையிலான 3 ஆண்டுகளில் 429 ஊராட்சிகளில் 311 ஊராட்சிகளில் குழந்தை திருமணங்கள் நடக்கவில்லை. 118 ஊராட்சிகளில் 1 முதல் 3 வரை குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. 21 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளில் 3க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

இந்தப்பகுதியில் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை தடுத்தல் தொடர்பான குறும்படங்கள் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டு அப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வளரிளம் பெண்களுக்கு குழந்தை திருமணம் தடுத்தல் இளம் வயதில் கருவுறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement