பயன்படாமல் முடங்கி வரும் நவீன இறைச்சி கூடங்கள்

சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் ரோட்டோர ஆட்டு இறைச்சிக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில் நவீன இறைச்சி கூடங்களில் ஆடுகளை வதை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் ஆட்டு இறைச்சிக் கடைகள் அதிகரித்து வருகிறது. இது போன்ற ஆட்டு இறைச்சி கடைகளில் வாசலில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிகள் மக்கள் முன்னிலையில் அறுக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டு விற்கப்படுகிறது.

ஆட்டு இறைச்சி விற்பனை செய்பவர்கள் முறைப்படி சுகாதார அலுவலர்களிடம் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை காட்டி அவை நலமுடன் உள்ளனவா மேலும் மக்கள் சாப்பிட உகந்ததா என்பதற்கு சான்று பெற்ற பின்பே அறுத்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு இறைச்சிக்காக விற்பனைக்கு கொண்டு வரப்படும் ஆடுகளை பரிசோதனை செய்து ஆடுகளை வதம் செய்வதற்காகவே நவீன இறைச்சி கூடங்கள் கட்டப்பட்டன. இவை பல உள்ளாட்சிகளில் பயன்படாமல் உள்ளன. மக்களும் தங்கள் கண் எதிரில் ஆடுகள் அறுக்கப்படுவதால் இந்த இறைச்சியே நல்ல இறைச்சி என எண்ணி ஏமாந்து கெட்டுப்போன இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.

நோய் பாதித்த ஆடு குறித்த விழிப்புணர்வு இன்மையால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது. சுகாதார ஆய்வாளர்களும், அலுவலர்களும் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் இறைச்சி கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.

எனவே செயல்படாமல் உள்ள இறைச்சி கூடங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement