ஓசூரில் தேசிய வளரி போட்டியில் தும்மு சின்னம்பட்டி மாணவர்கள் வெற்றி
திருச்சுழி: திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடந்த வளரி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேசிய அளவிலான வளரி விளையாட்டுப் போட்டிகள் ஓசூரில் நடந்தது. இதில் பாண்டியன் மரபு அறக்கட்டளை, மருது வளரி விளையாட்டு மேம்பாட்டு சங்கம், இந்தோ பூமராங் அசோசியேஷன் இணைந்து போட்டிகள் நடத்தின.
இதில் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, கேரளா, உத்தரகண்ட், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் இருந்து 100 வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சார்பாக திருச்சுழி அருகே தும்மு சின்னம்பட்டி கிராமத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர் முகேஷ் பாண்டி துல்லியடி பிடி, துரிதப்பிடியில் 2 ம் இடத்தையும், மாணவர் விக்னேஷ்குரு பொறுமைப்பிடியில் 2ம் இடத்தை பெற்றார். மருது வளரிகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலர் பிரசாத் தொலைதூர பிடி போட்டியில் 2 ம் இடத்தை பிடித்தார்.
தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள் பிரசாத், சண்முகராம், ரயில்வே உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டினர்.