மூடி கிடக்கும் நுாலகம், குண்டும் குழியுமான ரோடு

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் பெரிய ஓடைப்பட்டி ஊராட்சியில் மூடி கிடக்கும் நூலகம், குண்டு குழியுமான ரோடு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பெரிய ஓடைப்பட்டி ஊராட்சியில் சங்கரலிங்கபுரம் கிராம மட்டுமே உள்ளது மிகச்சிறிய ஊராட்சியான இங்கு விவசாயப் பணிகளே பிரதானமாக உள்ளது. வேறு தொழில் வசதி இல்லாத நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் பலரும் வெளிநாட்டில் வேலைக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.

ஊராட்சியில் உள்ள வீடுகளின் சொத்து வரி மட்டுமே பிரதான வருமானமாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து இங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

சாத்தூர் -- கோவில்பட்டி நான்கு வழி சாலையில் அமைந்துள்ள பெரிய ஓடைப்பட்டி ஊராட்சிக்கு செல்லும் மெயின் ரோடு குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக உள்ளது. பெரிய ஓடைப்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரம் செல்லும் ரோடும் இதுபோன்று மோசமான நிலையிலேயே உள்ளது.

ஊராட்சியில் ஒரே ஒரு பொது சுகாதார வளாகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. சங்கரலிங்கபுரம் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் வசதி இல்லை இங்கு வசிப்பவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பெரிய ஓடைப்பட்டியில் இருந்து மயான கரைக்கு செல்லும் ரோடும் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தை திறந்தவெளி கழிப்பறையாக மக்கள் பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

பெரிய ஓடைப்பட்டியில் உள்ள மக்கள் வெளியூர் செல்வதற்கு நான்கு வழிச்சாலையில் வந்து பஸ் ஏறி செல்கின்றனர். கிழக்கு பக்க ரோட்டில் பயணிகள் நிழற்குடை இல்லாத நிலையில் வெளியூர் செல்லும் பயணிகள் மழையில் நனைத்தபடியும் வெயிலில் காய்ந்தபடியும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Advertisement