குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேக்கமாக மாறிய குளம்

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் முத்துமாரி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள குளத்தில் தேங்கியுள்ள கழிவு நீரால் குடியிருப்புவாசிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிக்க துணி துவைக்க என இந்தக் குளம் பயன்பட்டு வந்தது. நாளடைவில் குளம் பயன்பாட்டின்றி போய்விட்டது. தற்போது மழை பெய்து குளம் நிரம்பிய நிலையில் நகரின் ஒட்டு மொத்த கழிவுகளும் இதில் தான் கலக்கின்றது. குளம் முழுவதுமே தற்போது பாசிப்படர்ந்து நிறம் மாறி உள்ளது.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் குளத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி குடியிருப்புக்குள்ளும் புகுந்து விடுகின்றது. இதிலிருந்து ஏற்படுகின்ற துர்நாற்றத்தால் இப்பகுதியில் குடியிருக்கவே முடியவில்லை என மக்கள் புலம்புகின்றனர். கொசுவால் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் இப்பகுதியினர் தினமும் மருத்துவமனைக்கு அலைகின்றனர். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிக அளவில் நடமாடுகின்றது. எனவே இந்த குளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சரவணக்குமார்: குளிக்க துணி துவைக்க என பயன்பட்டு வந்த குளம் தற்போது தொற்று நோய் கேந்திரமாக மாறிவிட்டது. சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் வந்து விடுகின்றது. அப்படி தண்ணீர் வரும்போது பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சேர்ந்தே வருகின்றது. எனவே குளத்தினை நிரந்தரமாக மூட வேண்டும்.

Advertisement