பேய் வலையில் பெண்களுக்கு கைவினைப் பொருள் பயிற்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலில் வீசிய பேய் வலையில் கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்து மீனவப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஐ.நா., சபை மேம்பாட்டு திட்டத்தில் மீனவர்கள் நிராகரித்து கடலில் வீசும் வலைகள் பேய் வலைகள் என்றழைக்கப்படுகிறது. இந்த பேய் வலைகள், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில், மிதவைகளை சேகரித்து அதனை கைவினை பொருளாக தயாரிப்பது குறித்து மீனவ பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி முகாம் ராமேஸ்வரம் கரையூரில் உள்ள கடற்கரை மாரியம்மன் கோவில் தெரு நகராட்சி மகாலில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வேல்விழி தலைமையில் நடந்தது. பேய் வலைகளால் ஏற்படும் தீமைகள், இதனை தடுத்து மேம்படுத்துவது குறித்து விளக்கினார்.

பயிற்சியில் பங்கேற்ற மீனவப் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் போஸ், கரையூர் கிராமத் தலைவர் மலைச்சாமி, தங்கச்சிமடம் சமூக ஆர்வலர் முருகேசன், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப உதவியாளர் கேவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement