பிரேசில் அதிபரை கொல்ல சதி: ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கைது
ரியோ டி ஜெனிரோ::ஆட்சி கவிழ்ப்பு சதி, அதிபர் லூலா மற்றும் பிறரை கொல்ல திட்டமிட்டதாக கூறி 5 அதிகாரிகளை பிரேசில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2022 அதிபர் தேர்தலில் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபர் ஆனார். அப்போது முதல் அதிபரை கொல்லும் திட்டம், ஆட்சியை கவிழ்ப்பு உள்ளிட்ட சதிதிட்டங்களை, 4 ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி ஆகியோர் தீட்டி வந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கைதான ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டியவர்கள் என தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ராணுவத்தின் சிறப்புப் படையில் பயிற்சி பெற்ற 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஒருவரும் அடங்குவர். இவர்கள் மீது நீண்ட காலமாகவே சந்தேகம் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.