சோலார் பவர் சேமிக்க 'பேட்டரி ஸ்டோரேஜ்' தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி
சென்னை:தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் திறன் உடைய சூரியசக்தி மின்சாரத்தை சேமித்து, திரும்ப பயன்படுத்தும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது.
இந்தியாவில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில், முதல் மூன்று இடங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல், பகலில் சூரிய மின்சக்தி கிடைக்கிறது. இதனால் பல நிறுவனங்களும், இங்கு சோலார் தகடுகளை அமைத்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 8,400 மெகா வாட் திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. தமிழகம் உட்பட நாடு முழுதும் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் உடனே பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ளது போல, இந்த மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து பயன்படுத்தும் வகையில், அதற்கான பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்புகளை மாநிலங்களில் ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டமைப்புகளை, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மாநிலம் முழுதும் உள்ள, துணை மின்நிலைய வளாகங்களில் அமைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான, பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.
ஸ்டோரேஜ் கட்டமைப்பு அமைக்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளை, மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.