காசாவுக்கு நிதி; உக்ரைன் போர் நிறுத்தம் செய்யணும்: ஜி20 மாநாட்டில் பிரகடனம்

3

ரியோ டி ஜெனிரோ: காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என ஜி20 மாநாட்டில் தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி20 மாநாடு நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் காசா விவகாரம், உக்ரைன் போர், ஐ.நா., சபை விரிவாக்கம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்த போதிலும் சில நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தன.

காசா விவகாரம்



இந்த தீர்மானத்தில் காசாவில் நிலவும் மோசமான சூழ்நிலை மற்றும் லெபனான் வரை பரவிய மோதல் குறித்து கூறப்பட்டு உள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும் எனவும், அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அமைதி ஏற்பட வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
அதேநேரத்தில் மாநாட்டின் போது பேசிய ஜோ பைடன், இந்த போருக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளே முக்கிய காரணம். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

உக்ரைன் போர்



ஜி20 அமைப்பில் ரஷ்யா இடம்பெற்றுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் புடின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் பங்கேற்றார். ஜி20 தீர்மானத்தில், உக்ரைனில் போர் நிறுத்தவும், உடனடியாக அங்கு அமைதி ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. இதில் ரஷ்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

கோடீஸ்வரர்களுக்கு வரி



கோடீஸ்வரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என ஜி20 பிரகடனத்தில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு பிரேசில் அதிபர் ஆதரவு அளித்தாலும் அர்ஜென்டினா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திட்டத்தால், 3 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்படுவர். லத்தீன் அமெரிக்காவில் மட்டும் 100 பேர் வரி கட்ட வேண்டிஇருக்கும்.

பசியால் வாடுவோருக்காக



இந்த பிரகடனத்தில் மிகவும் முக்கியமாக உலகளவில் உணவில்லாமல் பசியால் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பசி மற்றும் வறுமைக்கு எதிராக போராடுவது பிரேசில் அரசின் மிகவும் முக்கியமான திட்டமாகும்.
இந்த திட்டத்தில் உலகளவில் 82 நாடுகள் கையெழுத்து போட்டு உள்ளதாகவும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு சபை சீர்திருத்தம்



21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையில், கூடுதலாக உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என ஜி20 அமைப்பின் கூட்டு பிரகடனத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு, 21ம் நூற்றாண்டின் யதார்த்தங்கள் மற்றும் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகும் வகையிலும், அனைத்து தரப்பு பிரதிநிதித்துவம் இடம்பெறும் வகையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து ஏதும் இல்லை



இந்த மாநாட்டின் இறுதி பிரகடனத்தில் பருவ நிலை மாற்றம் குறித்து எந்த தீர்மானமும் குறிப்பிடப்படவில்லை. அதேநேரத்தில், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியை அதிகரிப்பது என தலைவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர். இந்த நிதியை யார் வழங்குவார்கள் என குறிப்பிடப்படவில்லை.

அஜர்பைஜானில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில், ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்க ஒப்புக் கொள்ளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement