நில ஒருங்கிணைப்பு சட்டம் ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; தமிழக சட்டசபையில், கடந்த 2023 ஏப்., 21ம் தேதி, நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கான மசோதா, விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாலை, விமான நிலையம், தொழிற்சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த, விவசாயிகள் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலைப்பாடு, மறுக்கப்படுகிறது என்றும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிக்கு நேர் எதிராக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

விவசாய சங்கங்களின் கடும் எதிர்பாப்பால், இச்சட்டம் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த ஆக., 23ம் தேதி, கவர்னர் ஒப்புதல் அளித்து, அரசிதழில் வெளியானது அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்கும் வகையில், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் குமரன் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, குமார் ஆகியோர், கோரிக்கையை விளக்கி பேசினர். மாவட்ட துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement