திடீரென்று முளைத்த டீக்கடை மின் இணைப்பில் அத்துமீறல்; துண்டித்த மின் வாரியத்தினர்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி வணிக வளாகத்தின் முன் திடீரென ஒரு டீ ஸ்டால் திறக்கப்பட்டது. கடைக்கு, வணிக வளாக மின் இணைப்பிலிருந்து மின்சாரம் எடுத்துப் பயன்படுத்தியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில், 24 கடைகளுடன் உள்ளது. இதில் சில கடைகள் பயன்படுத்தாமல் பூட்டிக் கிடக்கிறது.

இந்நிலையில், வணிக வளாகத்தின் முன் திடீரென ஒரு டீ ஸ்டால் திறக்கப்பட்டது. துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் இ.கம்யூ., நிர்வாகிகள் முன்னிலையில் இது திறக்கப்பட்டது.

இங்கு எந்த விதமான கடை அமைக்கவும், இடத்தை பயன்படுத்த வாடகை நிர்ணயம் செய்தோ மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

மேலும், இந்த கடைக்கு வணிக வளாகத்தில்உள்ள ஒரு மின் இணைப்பிலிருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தி, மின் இணைப்பை துண்டித்தனர். இது குறித்து நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனத் தெரிவித்தனர்.

மாநகராட்சி வணிக வளாகம் முன்புறம் புதிய கடை அமைக்கப்பட்டுள்ளது குறித்து, கமிஷனர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, ''இது குறித்து விசாரித்து தகவல் அளிக்கிறேன்,'' என்றார்.

Advertisement