அவிநாசி செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க மனு

திருப்பூர்; அவிநாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி - சேவூர் ரோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் சங்கரேஸ்வரி என்பவர், மற்ற செவிலியர்கள் பணிபுரியும் போது சட்டவிரோதமாக மொபைல்போனில் வீடியோ எடுக்கிறார்.

செவிலியரின் கணவரும், புற நோயாளிகள் பிரிவில் ஊசி போடும் பகுதியில், அனுமதியின்றி நுழைந்து, விடியோ எடுக்கிறார். இதனால், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற செவிலியர்களும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

சங்கரேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல ஆண்டுகளாக செவிலியர்கள் புகார் மனு அளித்தும், எந்த பயனுமில்லை. இதனால், உயிர்காக்கும் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல நோயாளிகள் பயப்படுகின்றனர்.

விபரீதங்கள் நடைபெறும்முன், சம்பந்தப்பட்ட செவிலியர் மற்றும் அவரது கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement