இந்திய அணி விலகல் * பாக்., மண்ணில் 'டி-20' உலக கோப்பை...
புதுடில்லி: வெளியுறவுத் துறை அனுமதி மறுத்ததை அடுத்து, பாகிஸ்தானில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய பார்வையற்றோர் அணி விலகியது.
பாகிஸ்தானில் பார்வையற்றோருக்கான உலக கோப்பை 'டி-20' தொடர், நவ. 23-டிச. 3ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இருந்தது. அடுத்து உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி கேட்டு இருந்தது.
இதனிடையே, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக (2025, பிப்.,) இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளது. இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் முடிவு குழப்பத்தை ஏற்படுத்தியது.
தற்போது பாதுகாப்பு காரணங்களுக்கான இந்திய பார்வையற்றோர் அணி, பாகிஸ்தான் செல்ல வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து 'டி-20' உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலகியது. தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் இத்தொடரில் இருந்து விலகியுள்ளன.