கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி தாமதம் பொங்கலுக்காவது பயன்பாட்டுக்கு வருமா?

சென்னை,கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இதனால், வரும் பொங்கலுக்குள் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கரில் புதிய பஸ் நிலையம், 393.71 கோடி ரூபாயில் கட்டி திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும், 80 சதவீத அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.

ஆனால், மின்சார ரயில் நிலையம் இணைப்பு வசதி இல்லை. இதனால், கிளாம்பாக்கத்திற்கு மின்சார ரயில்களில் எளிதாக செல்ல முடியவில்லை. எனவே, வண்டலுார் ரயில் நிலையத்தை அடுத்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், கடந்த ஜன., 2ல் துவங்கப்பட்டன.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. பணிகள் துவங்கி நடந்தாலும், ஆகஸ்டில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் முடியவில்லை.

இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில் இருந்து தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல, சாலை போக்குவரத்து வசதி மட்டுமே இருக்கிறது. பெரும்பாலான மக்கள், மாநகர பேருந்துகளை நம்பியுள்ளனர். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பயணியர் வந்து செல்ல கஷ்டமாக இருக்கிறது.

எனவே, கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் என்பது மிகவும் அவசியம். பயணியரின் அத்தியாவசிய தேவை கருதி, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

வண்டலுார் - கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மூன்று நடைமேடைகள், ரயில் நிலை மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், வாகன நிறுத்தம், 'சிசிடிவி' கேமராக்கள், நடைமேம்பாலம், எஸ்கலேட்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளோடு பணிகள் நடந்து வருகின்றன.

எனவே, அனைத்து பணிகளையும் ஓரிரு மாதங்களில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement