மஹா., ஜார்க்கண்டில் இன்று தேர்தல் ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு
மும்பை,;மஹாராஷ்டிராவில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜார்க்கண்டில், 38 தொகுதிகளில் கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஓட்டுச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 288 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பிளவுபட்ட தேசியவாத காங்., - சிவசேனா ஆகியவை ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மஹாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், பா.ஜ., மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதே போல், மஹா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார், உத்தவ் சிவசேனா பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக, 1,00,186 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7:00 - மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 4,140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில், 20 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்கள். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல்
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில், கடந்த 13ல், 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்நிலையில் மீதம்உள்ள 38 தொகுதிகளில், கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
இதையொட்டி, 14,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தலில், 55 பெண்கள் உட்பட, 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், 1.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இரு மாநிலங்களில் பதிவான ஓட்டுகள், 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பா.ஜ., தேசிய பொதுச்செயலர் வினோத் தாவ்டே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக, பகுஜன் விகாஸ் அகாடி கட்சி தலைவர் ஹிதேந்திர தாக்குர் நேற்று குற்றஞ்சாட்டினர். அவர் கூறுகையில், ''வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, பால்கர் மாவட்டத்தின் விரார் நகருக்கு பா.ஜ., பொதுச்செயலர் வினோத் தாவ்டே வருவதாக தகவல் கிடைத்தது. இதன்படி அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு 5 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ''வாக்காளர்களுக்கு கொடுக்கவே இந்தப் பணத்தை அவர் எடுத்து வந்துள்ளார். மேலும், வினோத் தாவ்டே தங்கியிருந்த ஹோட்டலில் கண்காணிப்பு கேரமாக்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. வினோத் தாவ்டே மீதும், பா.ஜ., மீதும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வினோத் தாவ்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் பணப் பட்டுவாடா தொடர்பாக வழக்குப் பதியப்படவில்லை. இது தொடர்பான வீடியோவை, சமூக வலைதளத்தில் காங்., வெளியிட்டுள்ளது. அதில், வினோத் தாவ்டேவை பகுஜன் விகாஸ் அகாடி தொண்டர்கள் சூழ்ந்திருப்பதும், அவர்களது கையில் ரொக்கப் பணம் இருப்பதும் பதிவாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை, வினோத் தாவ்டே திட்டவட்டமாக மறுத்தார்.