வரும் 27ல் ஜனாதிபதி ஊட்டி வருகிறார்
ஊட்டி:நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.
அதன்படி, இம்மாதம், 27ல் டில்லியில் இருந்து விமானம் வாயிலாக கோவை சூலுார் விமானப்படை விமான தளத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார்.
ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். 28ல் சாலை மார்க்கமாக குன்னுார் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரிக்கு சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் ஜனாதிபதி பேசுகிறார்.
இதன்பின், மீண்டும் ஊட்டி ராஜ்பவனில் வந்து தங்குகிறார். 29ல் ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களை சந்திக்கிறார். 30ல் காலை ஹெலிகாப்டர் வாயிலாக கோவை சூலுார் விமானப்படை தளத்திற்கு செல்லும் அவர் திருச்சி சென்று, அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், மீண்டும் திருச்சி வந்தடைந்து திருச்சியிலிருந்து டில்லி திரும்புகிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.