டில்லியில் காற்று மாசை குறைக்க.. மழை!

புதுடில்லி: டில்லியில் காற்று மாசை குறைக்க.. டில்லியில், காற்று மாசு மிகத் தீவிரம் என்ற அளவிலேயே தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கிறது. மூச்சு முட்டும் இந்த புகை மண்டலப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், செயற்கை மழையை ஏற்படுத்த அனுமதி வழங்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.

.


ஆண்டுதோறும் ஏற்படும் காற்று மாசு பிரச்னை, டில்லியை மீண்டும் தாக்கியுள்ளது. ஆனால், இத்தனைஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றின் தரம், அங்கு மிக மிக மோசமாக உள்ளது.

காற்றின் தரக் குறியீடு, நேற்று முன்தினம், 484 என்ற நிலையில் இருந்தது; நேற்று, 494 என மிகவும் மோசமடைந்தது. அதாவது, காற்றின் தரம் 450க்கு அதிகமானால், அது மிகத் தீவிரம் பிளஸ் என்றழைக்கப்படுகிறது.

இது குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

காற்று மாசைக் கட்டுப்படுத்த, ஜி.ஆர்.ஏ.பி., எனப்படும் கட்டுப்பாட்டு நடைமுறைகளின் நான்காம் கட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் டிரக்குகள் தவிர மற்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உட்கட்டமைப்பு கட்டுமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு பல கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டும், காற்று மாசு பிரச்னையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று காலையும், காற்று தரக் குறியீடு 494 என தீவிரமடைந்து, எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு டில்லியை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, செயற்கை மழையை பெய்விக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளார்.

செயற்கை மழைக்கு அனுமதி அளிக்கும் வகையில், தொடர்புடைய துறைகளின் கூட்டத்தை உடனடியாக கூட்டும்படி அதில் அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ''அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கவில்லை.

''வாகனங்களை ஒற்றைப் படை, இரட்டைப்படை பதிவெண்படி இயக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது,'' என்றார்.

ஆனாலும், டில்லி அரசின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு தரப்பில் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையே, டில்லியை ஒட்டியுள்ள ஹரியானாவின் குருகிராம், உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் போன்ற நகரங்களிலும், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து புகை மூட்டமாக இருப்பதால், டில்லியில், விமான மற்றும் ரயில் போக்குவரத்து நேற்றும் பாதிக்கப்பட்டது.

தலைநகராக நீடிக்க வேண்டுமா?

நவம்பர் முதல் ஜனவரி வரை, மக்கள் வசிக்கவே முடியாதநகரமாக டில்லி மாறி விட்டது. இதுபோன்ற சூழலில், இனியும் நாட்டின் தலைநகராக டில்லி நீடிக்க வேண்டுமா?

- சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி.,



சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

டில்லி காற்று மாசு பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு நேற்று விசாரணையை துவக்கியது. அப்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கபில் சிபில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியன் ஆகியோர், ஆன்லைன் வாயிலாக விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.'உச்ச நீதிமன்றத்துக்கு தினமும், 1-0,000 வழக்கறிஞர்கள் சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதைத் தவிர, வழக்கறிஞர்களின் உதவியாளர், நீதிமன்ற ஊழியர்கள் என, பலரும் சொந்த வாகனங்களில் வருகின்றனர். மாசு ஏற்படுத்துவதை தடுக்க, ஆன்லைன் வாயிலாக விசாரணையை நடத்தலாம்' என, மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.'நீதிமன்றம், ஆன்லைன் வாயிலாக செயல்பட முடியாது. அதே நேரத்தில், வாய்ப்புள்ள இடங்களில், ஆன்லைன் வாயிலாக வழக்கறிஞர்கள் வாதிடலாம்' என, அமர்வு கூறியது.

Advertisement