கல்லாறு பாலத்தில் கம்பிகள்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்; கல்லாறு பாலத்தின் மீது, சாலையில் தெரியும் கம்பிகளால், வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், மேட்டுப்பாளையம், வழியாக, குன்னூர் மற்றும் ஊட்டிக்கு செல்கின்றன.

கல்லாறு பாலம் கட்டி, 7 ஆண்டுகள் ஆகின்றன. பாலத்தின் மீது சாலையின் ஒரு பகுதியில், கான்கிரீட் கலவைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன.

வேகமாக வரும் வாகன ஓட்டுநர்களுக்கு, சாலையில் உள்ள குழி மற்றும் கம்பிகள் இருப்பது தெரிவதில்லை. அருகே வரும் போது தான், கம்பிகள் மீது விடாமல் இருக்க, வாகனத்தை வளைத்து ஓட்டுகின்றனர்.

இதனால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. வேகமாக வரும் சிலர் குழியில் உள்ள கம்பிகள் மீது வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

சுற்றுலா மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், மலைப்பாதையில் செல்லும் போது, கம்பி குத்தி பஞ்சர் ஏற்பட்டால், நடுவழியில் நின்று அவதிப்படுவர்.

எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உடனடியாக கம்பிகள் மீது கான்கிரீட் கலவையை போட்டு சாலையை சீரமைக்க வேண்டும்.

Advertisement